மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கக் கூடாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னை பாலன் இல்லத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்
சிபிஐ


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னை பாலன் இல்லத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும் கட்சி தெரிவித்துள்ளது.

18 வயது நிறைவடைந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பது ஜனநாயக விவாதங்களில் இருந்து கல்வி நிறுவனங்களைத் துண்டிக்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்ட சம்பவத்தையும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அந்த உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது துறைவாரியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வைத் தடுப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்ட உரிமைகள், ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள கல்வி நிறுவன மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam