சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் அரசு கால அவகாசம் கேட்க முடியாது - வீரமணி
நெல்லை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சார பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு இன்று மாலை டவுனில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த திராவிடர் கழகத் தலைவர்
K Veeramani


நெல்லை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சார பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு இன்று மாலை டவுனில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு என்பது தீயணைப்பு பணி போன்றது. இதற்கு கால அவகாசம் கேட்க முடியாது. பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டுமானால் அரசு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் அரசு எந்தவித கால அவகாசமும் கேட்க முடியாது.

மக்கள் பாதுகாப்புதான் முதன்மையானது. ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நெல்லையில் ஆணவக் கொலைகள், கூலிப்படை கொலைகள் மற்றும் கோவையில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. முந்தைய ஆட்சியை காரணம் காட்டி தப்பிக்க முடியாது.

கருத்து சுதந்திரத்தை முடக்குவது பாசிசம். அரசியல் விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்களை நசுக்கி கைது செய்வதை நீதிமன்றங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது என்று நினைப்பது பாசிசம். இந்த அரசு பாசிசத்திற்கு துணை போகிறதா? என்பதை ஆட்சியாளர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக செயல்படக் கூடாது.

நீட் தேர்வால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 6 குழுக்களாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது காரணமே இல்லாமல் காவல்துறை தடை விதித்தது.

மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் என்ற போலி காரணங்களை அரசு கூறியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றம் காவல்துறையின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக கண்டித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகம் பதவி ஆசை கொண்ட இயக்கம் அல்ல. மக்களின் உரிமைக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் தொடர்ந்து களத்தில் நிற்கும் சமுதாய இயக்கம்.

ஜாதி வெறி, போதை கலாச்சாரம் போன்ற சமூக தீமைகளுக்கு எதிரான எங்கள் பிரச்சாரம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN