Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக திமுக தெரிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, “சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவை நடக்கின்றனவா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய ‘சூப்பர் பவர்’ கையில் ஆட்சி இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக, மாணவர் விரோத நடவடிக்கைகளை த.வெ.க. அரசு மேற்கொள்வதாகவும் திமுக கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும், த.வெ.க. அரசை ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காக்கப் போகிறார்களா என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P