குவாரிகள் மூடப்பட்டதால் எம்-சாண்ட், ஜல்லி விலை கடும் உயர்வு - நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச) குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, வீடு கட்டும் செலவு சதுரடிக்கு சுமார் ₹100 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல கட்டும
Edappadi Palaniswami urges action in the Assembly


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)

குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, வீடு கட்டும் செலவு சதுரடிக்கு சுமார் ₹100 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல கட்டுமானத் திட்டங்கள் மற்றும் சாலைப் பணிகள் பாதியிலேயே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி,

மாநிலம் முழுவதும் கட்டுமானப் பொருட்களான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முறைகேடுகள் மற்றும் விதிகளை மீறியதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு கிடப்பதால் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது என்றும், இதன் காரணமாக சந்தையில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எம்-சாண்ட் மற்றும் ஜல்லி உற்பத்தித் திறனை அதிகரித்து, தட்டுப்பாட்டைப் போக்கி விலையைக் குறைக்கத் தற்போதைய அரசு ஏதேனும் திட்டங்களை வைத்துள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விலை உயர்வு சாதாரண மக்கள் வீடு கட்டுவதற்கும், சிறு ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே மூடப்பட்டுள்ள குவாரிகளை உடனடியாக திறந்து, எம்-சாண்ட் உற்பத்தியை அதிகரிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசே நேரடியாக உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேரவையில் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b