குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தடை- உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நடைபெற உள்ள கபடி போட்டியில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சோழவந்தான் சங்கங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் தாக்கல்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நடைபெற உள்ள கபடி போட்டியில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சோழவந்தான் சங்கங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் தாக்கல் செய்த மனுவில், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் மந்தைக்களத்தில் கபடி போட்டி நடத்த அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கோரியிருந்தார். இதற்கு காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து போட்டி நடத்த அனுமதி வழங்கக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எல். விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடி போட்டி நடத்த அனுமதி வழங்கினார்.

மேலும், போட்டியின்போது அரசியல் கட்சி, தலைவர்கள், சாதி, சமூகம் அல்லது மதப்பிரிவுகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ முழக்கங்கள் எழுப்பக் கூடாது. ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது மதம் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற ஆடைகளை அணியக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மத உணர்வுகளைத் தூண்டும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்றும், குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் பிளக்ஸ் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்றும், போட்டியில் பங்கேற்பவர்கள் போதைப் பொருட்கள் மற்றும் மதுவை உட்கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போட்டியை நிறுத்தவும் போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P