கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை,சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு கண்டனம் தெரிவித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக
அன்புமணி


தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு கண்டனம் தெரிவித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகத்தின் சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிரச்சினை என்பதால், தமிழக அரசோ அல்லது தமிழக அரசியல் கட்சிகளோ கருத்து தெரிவிக்கக்கூடாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் புதிய ஆதாரங்கள் வெளியாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி மற்றும் ஹனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் ஆகியோர் வனத்துறையினரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு காலணியை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தால் காலணிகள் புதியதாகவும், கரைபடாமலும் இருக்க வாய்ப்பில்லை என சில காவல்துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தவும் முழு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்டவற்றில் தமிழக அரசும், மக்களும் கண்டனம் தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கொண்டிருப்பது தவறு என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam