கவின் கொலை வழக்கு - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
நெல்லை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (24). மென்பொருள் பொறியாளராக இருந்த இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பட்டப்பகலில் காதலித்த பெண்ணின் வீட்டார் தரப்பில் படுகொலை செய்யப்பட்டார். கொல
Kavin


நெல்லை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (24). மென்பொருள் பொறியாளராக இருந்த இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பட்டப்பகலில் காதலித்த பெண்ணின் வீட்டார் தரப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

கொலையான கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முதலில் பாளையங்கோட்டை போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெற்றோர்களும், இந்த கொலையில் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கொலையாளியான பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர்.

பின்னர் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், எஸ்ஐயுமான கிருஷ்ணகுமாரியையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த கொலை வழக்கு, திருநெல்வேலி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற உத்தரவின்படி சுர்ஜித், சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில், சரவணன் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் கவின் கொலை வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள தகவலை, சிபிசிஐடி போலீசார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து நீதிபதி ஹேமாவிடம், கவின் கொலை வழக்கில், சரவணனை திருநெல்வேலி நீதிமன்றம் காவலில் எடுக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சரவணன், சுர்ஜித், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகிய 4 பேரின் நீதிமன்றக் காவலையும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN