Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை கீழ்ப்பாக்கம் EVR சாலையில் அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு தரைத்தளத்தில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படும் அந்த நபர், பணிகள் நடைபெறும் இடத்தின் வாசல் அருகே நைலான் கயிற்றில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டார்.
இரவு பணியில் இருந்த மருத்துவமனை உதவி ஆய்வாளர் காமராஜ் ரோந்து சென்றபோது, அந்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் மருத்துவமனைக்கு எதற்காக வந்தார், மருத்துவமனைக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ