தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு அமித்ஷா இன்று சென்னை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச) செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையடுத்து சென்னை விமான நிலையம் மற்று
Amithsha


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

இதற்காக அமித்ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இரவு 7.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ள நிலையில், பின்னர் காரில் கோவளம் பிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்குகிறார்.

நாளை நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் அமித்ஷா, பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் கோவளத்தில் இருந்து காரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து மாலை 3.45 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமித்ஷாவின் சென்னை வருகை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று காலை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அமித்ஷாவுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், முக்கிய பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையப் பகுதியில் இன்று மற்றும் நாளை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அவர் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் மற்றும் கோவளம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ