Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்,
தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி அமைய முதலில் ஆதரவு அளித்தது காங்கிரஸ் எனக் கூறினார்.
தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜேஷுக்கு வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அவர், ராஜேஷ் அமைச்சராக இருப்பது வரலாற்றின் முக்கிய காலகட்டம் என்றும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜயை அவரது அமைச்சர்கள் பிரதமர் எனக் கூறுவது குறித்து பேசிய மாணிக்கம் தாகூர்,
தொண்டர்கள் தன்னை சந்திக்கும்போதும் இதுபோன்ற முழக்கங்களை எழுப்புவதாகவும், எனவே தொண்டர்களின் கோஷங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார். அமைச்சர்களை தாம் தொண்டர்களாகவே கருதுவதாகவும் கூறினார்.
மேகதாது விவகாரம் குறித்து அவர் பேசுகையில்,
கர்நாடக அரசு தனது முடிவுகளை எடுத்தாலும் தமிழகத்தின் நலனை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்றார். மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு உதவக்கூடாது என்றும், அதிமுக மற்றும் பாமக இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
“பிரதமர் மோடி நினைக்கவில்லை என்றால் மேகதாது அணை வராது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டிப்பதாகவும், பாஜக முன்னாள் முதல்வர் பொம்மையையும் கண்டிப்பதாகவும் கூறினார்.
தமிழக பாஜக இந்த விவகாரத்தில் உரிய எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு என்பது காங்கிரஸின் லட்சியம் என்றாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்கூட முழுமையான மதுவிலக்கு அமலில் இல்லை எனத் தெரிவித்தார்.
சாராயக்கடைகளை திறப்பது காங்கிரஸின் பணி அல்ல என்றும், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
முதலமைச்சர் விஜய் முன்னெடுத்து வரும் “போதையில்லா தமிழ்நாடு” முயற்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து போதைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை, லாக்கப் மரணங்கள், மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / ANANDHAN