Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுதந்திரப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவுமான தீரர் எஸ். சத்யமூர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
1923ஆம் ஆண்டு மதராஸ் சட்டமன்ற கவுன்சிலிலும், 1935 முதல் 1939ஆம் ஆண்டு வரை மத்திய சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பணியாற்றிய சத்யமூர்த்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிராக தனது கேள்விகளாலும், கம்பீரமான வாதங்களாலும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது நாடாளுமன்ற ஆற்றலைப் பாராட்டிய மகாத்மா காந்தியடிகள், மதராஸ் சட்டமன்றத்திற்கு ஒரே ஒரு சத்யமூர்த்தியை அனுப்பினாலே போதும் என்றும், மத்திய சட்டமன்றத்தில் அவரது செயல்பாடுகளை கண்டு, சட்டமன்றங்களில் பத்து சத்யமூர்த்திகள் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் எப்போதோ நாட்டை விட்டு வெளியேறியிருப்பார்கள் என்றும் பாராட்டியதை மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் வகையில் பூண்டி நீர்த்தேக்கத்தை உருவாக்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும் சத்யமூர்த்தி விளங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது சத்யமூர்த்தி சாகர் என அழைக்கப்படும் பூண்டி நீர்த்தேக்கம், அவரது மக்கள் நலப் பணிக்கு சிறந்த சான்றாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலையை சுதந்திரப் போராட்டத்தின் ஒரு கருவியாக பயன்படுத்திய சத்யமூர்த்தி, 1927ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இசை விழாவை முன்னெடுத்ததுடன், பின்னாளில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி உருவாகவும் முக்கிய காரணமாக இருந்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
பரதநாட்டியக் கலையின் மறுமலர்ச்சிக்கும், கலைஞர் கே.பி. சுந்தராம்பாளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக இருந்ததுடன், அண்ணாமலைப் பல்கலைக்கழக உருவாக்கம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை வளர்ச்சியிலும் சத்யமூர்த்தி முக்கியப் பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாஜி, ஆந்திர கேசரி பிரகாசம் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து தேசப்பணியாற்றிய சத்யமூர்த்தி, மக்கள் மன்றங்களில் கம்பீரமாக முழங்கிய அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், திருவண்ணாமலை ரமண மகரிஷியின் முன்னிலையில் மௌனத்தின் பேரமைதியை உணர்ந்த ஆன்மீகவாதியாகவும் விளங்கியதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையகமான ‘சத்யமூர்த்தி பவன்’ வழியாக இன்றும் மக்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தீரர் சத்யமூர்த்தியின் தியாகத்தையும், தேசத்திற்கும் தமிழகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் பிறந்தநாளில் போற்றி வணங்குவோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ