மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் போராடுவோம் - மாணிக்கம் தாகூர்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச) இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தங்களது உரிமைகளுக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறை
Manickam Tagore


Jn


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)

இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தங்களது உரிமைகளுக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கும் பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டிய நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேரடியாக பதிலளிக்காமல் பல நாட்கள் அவையைத் தவிர்த்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதி நாளிலும் மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்விகளில் இருந்து ஓடலாம்; ஆனால் பொறுப்பிலிருந்து ஓட முடியாது என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு இன்று வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மாணவர்கள் மீதான காவல்துறை வன்முறைக்கு பதில் அளிக்க வேண்டும், தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு முயற்சியையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ள அவர், இன்று (ஆகஸ்ட் 19) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ