Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், அப்பகுதிகளில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாஞ்சோலை, மேகமலை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில், மேகமலை புலிகள் சரணாலயத்தில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பல ஏக்கர் பரப்பில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்த பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் செயல்பட்டு வந்த விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முழுமையாக நடவடிக்கை எடுக்க 3 மாத கால அவகாசம் தேவை என்றும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், விடுதிகளை மூடினால் மட்டும் போதாது; அவற்றை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என்றும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எந்தவித ஆக்கிரமிப்பையும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், இலவம் பஞ்சு தோட்டங்கள் அமைந்துள்ள நிலங்களை முழுமையாக கையகப்படுத்தி, தோட்டங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதற்கு தோட்டங்களில் பணியாற்றுவதற்காக தொழிலாளர்களை குடியமர்த்துவதும் முக்கிய காரணமாக இருப்பதால் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என தெரிவித்தனர்.
ரிசர்வ் வனப்பகுதிகளில் எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என்றும், ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும், ஆக்கிரமித்துள்ளவர்களின் கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட இணைப்புகளை துண்டிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P