Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும், தேர்வு நடைமுறையை மேம்படுத்தவும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேடுகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் இதுவரை ஏன் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளில் இன்னும் குறைபாடுகள் உள்ளதாகவும், நிரந்தர அதிகாரிகளை நியமித்து அந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், முந்தைய குழுவின் பரிந்துரைகளையும் புதிய குழு ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீட் வினாத்தாள்களை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது தவறான நடைமுறை என்றும், மொழிபெயர்ப்புக்கு ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்ப முடியாது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P