Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் லைன்மேன் தோட்டம் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
மேலும், பள்ளி பாடப் புத்தகங்கள், அரசு ஆவணங்கள், அடையாள அட்டைகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் தீயில் கருகின.
சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டிடப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வீட்டில் இணையதள இணைப்புக்காக பயன்படுத்தப்பட்ட வைஃபை பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து தீப்பொறி உருவாகி மின்சாரம் மூலம் தீ பரவி பின்னர் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தீ விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்குப் பிறகே தீ விபத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam