பெரம்பலூர் டீக்கடை சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) பெரம்பலூரில் டீக்கடையில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவு தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்
Gas


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெரம்பலூரில் டீக்கடையில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவு தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி பெரம்பலூர் அருணாச்சலம் டீக்கடையில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் டீக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட 16 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த டீக்கடை மாஸ்டர் தினேஷ் உயிரிழந்தார். அதே நாளில் பெரம்பலூர் ரெங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சகாதேவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த டீக்கடை சப்ளையர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று பெரம்பலூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த டீக்கடை சப்ளையர் புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், பெரம்பலூர் டீக்கடை சிலிண்டர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பெரம்பலூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசின் நிவாரணத் தொகையாக ரூ.2.10 லட்சத்திற்கான ஆணை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ