Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கைவினைக் கலைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், மரவள்ளிக்கிழங்கு மாவை பசையாக மாற்றி அதைக்கொண்டு சிலைகள் உருவாக்கப்படுவதால் இவை முழுமையாக மக்கும் தன்மை கொண்டவை.
இந்த சிலைகள் நீரில் கரைக்கப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் முழுமையாக கரைந்து விடுவதால், நீர்நிலைகளில் கழிவுகள் தேங்குவது பெருமளவில் குறைக்கப்படுகிறது என்று கலைஞர்கள் தெரிவித்தனர். மேலும் சிலைகளுக்கான அலங்காரத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையிலான ரங்கோலி வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய சிலை வடிவமைப்பாளர்கள்,
நாங்கள் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறோம்.
நாங்கள் செய்யும் சிலைகள் 3 அடி முதல் அதிகபட்சமாக 10 அடி வரை இருக்கும், முழுவதும் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
எங்கள் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு முன்பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன, எங்களது பாரம்பரிய தொழில் படிப்படியாக நலிவடைந்து வருகிறது.
விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான கடுமையான விதிமுறைகளை தளர்த்தி, அதிக இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும். பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கவும், தொழில் நலிவடைவதை தடுக்கவும் நிதி உதவி மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்
என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கலைஞர்கள் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்ய தயாராகி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் அதிகமான பக்தர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை தேர்வு செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b