ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமநாதபுரம், 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக் கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறி
Fishermen Protest


ராமநாதபுரம், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக் கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடல் பகுதியில் அலைகளின் வேகம் அதிகரித்து, திடீரென கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைவதைத் தவிர்க்கும் வகையில், படகுகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ராமேஸ்வரம், மண்டபம், சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN