Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டுத் தலங்களில் யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களிடம் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், பிராமணர் அல்லாத பக்தர்கள் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் பக்கவாட்டு வாசல் வழியாக அனுப்பப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்கள் சன்னதிகள் குறுகிய இடவசதி கொண்டிருப்பதால், சேவா காலங்களில் பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுவதாகவும், இதில் சாதிப் பாகுபாடு எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட சேவா காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுப் பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப் பிரபந்தம் பாடி வழிபட எந்தத் தடையும் இல்லை என்றும், தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமம் என்பதை வலியுறுத்தி, பகவத் கீதையின் கருத்தை சுட்டிக்காட்டினர். வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என தெரிவித்த நீதிபதிகள், கோயில் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P