Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக முத்துப்பேட்டை, வடபாதிமங்கலம், பாரதிமூலங்குடி, கண்கொடத்தவணிதம், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன. மேலும் போர்வெல் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக கடுமையான வெயில் நீடித்து வரும் நிலையில், கமலாபுரம், பாரதிமூலங்குடி, ஓகைபேரையூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெயிலின் தாக்கத்தால் குருத்தோடு காய்ந்து கருகி வருகின்றன. சில மரங்கள் முற்றிலும் பட்டுப்போய் கீழே விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தென்னை விவசாயிகளின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றாட சமையல் தேவைகளில் முக்கியப் பொருளாக உள்ள தேங்காயின் வரத்து குறைந்துள்ளதால், தற்போது கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை உயர்வால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam