ஆழியார் கவியருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு - இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பிரபல சுற்றுலாத் தலமான ஆழியார் கவியருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பக
ஆழியார் கவியருவி


கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பிரபல சுற்றுலாத் தலமான ஆழியார் கவியருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தலைநார் எஸ்டேட், சக்தி எஸ்டேட், சண்முகா எஸ்டேட், வால்பாறை மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக வனப்பகுதியில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது நாளாகவும் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் கவியருவிக்கு வந்த நிலையில், தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam