கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னம்- 311 ஆண்டுகள் நிறைவு கண்ட ஸ்ரீவாரி லட்டு
திருப்பதி , 02 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகப் புகழ்பெற்ற திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாரி லட்டு பிரசாதம், இன்று (ஆகஸ்ட் 2) தனது 311-வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
A


திருப்பதி , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலகப் புகழ்பெற்ற திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாரி லட்டு பிரசாதம், இன்று (ஆகஸ்ட் 2) தனது 311-வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த திவ்ய பிரசாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பாரம்பரிய மடப்பள்ளியான 'பொட்டு'வில், பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய முறையிலும், தூய்மையான சூழலிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாக வழங்கப்பட்ட இந்த பிரசாதம், 1803-ம் ஆண்டு முதல் 'காலணா' விலையில் லட்டு வடிவில் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் அதன் புகழ் உலகம் முழுவதும் பரவி, திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தவறாமல் பெற்றுச் செல்லும் புனித பிரசாதமாக மாறியது.

தனித்துவமான சுவை, மணம் மற்றும் பாரம்பரிய தயாரிப்பு முறைக்காக ஸ்ரீவாரி லட்டுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்களின் பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மிக உணர்வுடன் ஒன்றிணைந்துள்ள ஸ்ரீவாரி லட்டு, திருமலை திருத்தலத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

311 ஆண்டுகளாக பக்தர்களின் மனதிலும், இல்லங்களிலும் இடம்பிடித்துள்ள ஸ்ரீவாரி லட்டின் பாரம்பரிய பெருமையை நினைவுகூரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இன்று கருதப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA