Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா இணைந்து செயல்படுவதற்கான வகையில், இரு நாடுகளுக்கு இடையே 4 முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது குறித்து அமைச்சர் லோகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி, மேம்பாடு மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன் ஹில் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு அமைச்சர் லோகேஷ் ஆஸ்திரேலியா சென்றபோது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தூய்மையான எரிசக்தி, நவீன தொழில்நுட்பம், கல்வி, மாணவர் நலன் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஆந்திரா-ஆஸ்திரேலியா கூட்டணி வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவை சூரிய மின்சார உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியின் முக்கிய மையமாக உருவாக்கும் நோக்கில், திருப்பதி ஐ.ஐ.டி., ஆந்திர அரசின் எரிசக்தி மாற்றத்துக்கான சிறப்பு மையம் மற்றும் சிட்னியை சேர்ந்த யூ.என்.எஸ்.டபிள்யூ. பல்கலைக்கழகம் இணைந்து சோலார் உற்பத்தி சிறப்பு மையத்தை அமைக்க உள்ளன.
இந்த மையத்தின் மூலம் நவீன சோலார் பேனல் உற்பத்தி தொழில்நுட்பம், மறுசுழற்சி, தொழில் சார்ந்த ஆராய்ச்சி, ஆசிரியர் பயிற்சி மற்றும் உலகத் தரமான திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், ஆட்டிசம் உள்ளிட்ட சிறப்பு கற்றல் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்தும் வகையில், யூ.என்.எஸ்.டபிள்யூ. பல்கலைக்கழகம், ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர சமக்ர சிக்ஷா திட்டம் இணைந்து செயல்பட உள்ளன. இதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தேவையான கல்வி வளங்கள் உருவாக்கப்படும்.
மாணவர்களின் மனநலம் மற்றும் நலவாழ்வை கருத்தில் கொண்டு, ரவுண்ட் டிம்பிள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேர்வு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் முன்னோடி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில் மாணவர்களுக்கு ரகசியமான நல மதிப்பீடு மற்றும் இணையவழி ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.
ஆந்திர மாநில இளைஞர்களுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் டைனமிக் லேர்னிங் சர்வீசஸ் நிறுவனம் இடையேயும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழில் துறைக்கு தேவையான திறன் பயிற்சி, தொழில்முறை சான்றிதழ்கள் மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
ஆந்திர இளைஞர்களை எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தயார்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA