Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 02 ஆகஸ்ட் (ஹி.ச)
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுருளி அருவிக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீரால் பாறைகள் அனைத்தும் மூழ்கியுள்ளதால், அங்கு குளிப்பது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க இன்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அருவிக்கு செல்லும் பாதை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாரும் அருவிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
விடுமுறை நாளான இன்று சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மழையின் தீவிரம் குறைந்து நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b