Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திராவைச் சேர்ந்த குமுதா, பெங்களூரு சாம்ராஜ் பேட்டையில் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதியரின் மகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த குமுதா,என்ன செய்வது என்று தெரியாமல்,தனக்கு சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கடன் பெற்றுத்தந்து உதவிய அப்சர் பாஷா என்ற பாபாவை நாடினார்.
அப்சர் பாஷா இனிமேல் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்க தோஷம் கழிக்க வேண்டும் அதற்காக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி அந்த பூஜை நடத்த ரூ.8 லட்சம் செலவாகும் என்றும் பாபா கூறியுள்ளார்.
இதை நம்பிய குமுதா, தனது வீட்டில் பூஜை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த பூஜையில் அப்சர் பாஷாவுடன் அவரது கூட்டாளிகளான சங்கர் மற்றும் பரத் ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர், ரிசர்வ் வங்கியில் இருந்து தங்களுக்கு ரூ.500 கோடி கிடைக்க இருப்பதாகவும், அதில் பங்கு பெற ரூ.3 கோடி முதலீடு செய்தால் ரூ.10 கோடியை திருப்பி வழங்குவதாகவும் அவர்கள் குமுதாவிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
அவர்களின் பேச்சை உண்மை என நம்பிய குமுதா, சாம்ராஜ்பேட்டையில் இருந்த தனது வீட்டை ரூ.9 கோடிக்கு விற்று, அதில் ரூ.3 கோடியை அப்சர் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் வழங்கியுள்ளார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அப்சர் பாஷா அவர் கூறியபடி எந்தத் தொகையையும் வழங்கவில்லை.
மேலும், குமுதா கொடுத்த ரூ.3 கோடியையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குமுதா கேட்டபோது, அப்சர் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து குமுதா, மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் அப்சர் பாஷா, சங்கர், பரத் ஆகிய 3 பேர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA