1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு - மேலும் 2 வழக்குகளில் சரத் சுப்பிரமணியன் கைது
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பாதுகாப்பு அமைப்புகளை பல ஆண்டுகளாக பரபரப்பில் ஆழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சரத் சுப்பிரமணியன் மீது மேலும் இரண்டு வழக்குகளில் கைது ந
கைது


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பாதுகாப்பு அமைப்புகளை பல ஆண்டுகளாக பரபரப்பில் ஆழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சரத் சுப்பிரமணியன் மீது மேலும் இரண்டு வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் இதுவரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவில் இருந்து வந்தபோது குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சரத் சுப்பிரமணியனை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக அவரை கண்காணித்து வந்த நிலையில், அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் கிடைத்த டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு நாட்கள் போலீஸ் காவலில் நடைபெற்ற விசாரணையில்,

2023 முதல் 2025 வரை விமான நிலையங்கள், விமானங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

இதில் மட்டும் 109 முறை விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு அனுப்பப்பட்ட மிரட்டல்களால் விமானங்கள் தாமதமானதுடன், சில சேவைகள் ரத்து செய்யப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் மட்டும் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மும்பை, ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநில காவல்துறையினரும் சென்னை போலீசாரை தொடர்புகொண்டு வழக்கு தொடர்பான விவரங்களை பெற்று வருகின்றனர்.

மும்பை குற்றப்பிரிவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தனது அடையாளத்தை மறைக்க VPN, குறியாக்கப்பட்ட தொடர்பு சேவைகள் (Encrypted Services), டார்க் வெப் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதாகவும், போலி மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்ப பயன்படுத்திய செல்போனை அமெரிக்காவில் இருந்தபோதே தூக்கி எறிந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam