சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை - சீரியல் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை, ரூ.2 லட்சம் மற்றும் 11 சவரன் நகை பறிப்பு
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையைச் சேர்ந்த சீரியல் நடிகைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் வீடியோவைக் காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணம் மற்றும் 11 சவரன் தங்க நகைகளை பறித்ததாகக் கூற
கைது


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையைச் சேர்ந்த சீரியல் நடிகைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் வீடியோவைக் காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணம் மற்றும் 11 சவரன் தங்க நகைகளை பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சீரியல் நடிகை, கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்.

நடிகையின் தோழி மூலம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஷேக் முத்தலிஃப் (43) மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், நடிகையின் நடிப்பை பாராட்டி, விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துச் சென்றதாகவும், அதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கு, சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஷேக் முத்தலிஃப் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை வெளியிடுவதாக மிரட்டி, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 11 சவரன் தங்க நகைகளை பறித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணம் மற்றும் நகைகளை திருப்பிக் கேட்டு சென்றபோதெல்லாம், சுரேஷ் கண்ணா ஷேக் முத்தலிஃப்புக்கு ஆதரவாக இருந்து நடிகையை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நடிகை கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். முதலில் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, சம்பவம் நடைபெற்ற இடமான மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

பின்னர், புகார்தாரரும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், வழக்கு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, ஜூலை 25-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட ஷேக் முத்தலிஃப்பை போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கண்ணா இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam