காங்கிரஸ் கட்சியை நச்சுப் பாம்புகள், துரோகிகள் என்று விமர்சித்த தயாநிதி மாறன்
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) ''நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்'' என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், ''தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு காவிரி உ
Dayanidhi Maran


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

'நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்' என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், 'தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில்,

நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்! காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்! நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!

பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே! ஆட்சியையும், அமைச்சர்களையும் விமர்சித்து எக்ஸில் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே! டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட் எதிர்ப்புப் போராட்ட மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!

தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது! அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தயாநிதி மாறனின் பதிவை ரீட்வீட் செய்து குறிப்பிட்டுள்ள திமுக ஐ.டி விங், சொந்த மாநிலத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் குரல் கொடுக்க துப்பில்லாதவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் பேசுவது என்ன மாதிரியான சாபக்கேடு? தன் சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பவர்களையும், அராஜகங்களை கண்டு கொள்ளாமல் இரட்டை வேடம் போடும் துரோகிகளை மக்கள் அடையாளம் காண வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN