Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹெச்.எஸ்)
த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏழாவது நாளாகவும், அவரது சகோதரர் அசோக்குமார் ஐந்தாவது நாளாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
அதன்பின் இருவரிடமும் காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,
தாம் தலைமறைவாக இருந்ததாக பரப்பப்படும் தகவல்களை மறுத்தார். உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டியிருந்ததால், குறிப்பிட்ட நாட்களில் கையெழுத்திடுவதிலிருந்து விலக்கு கோரி விசாரணை அதிகாரிக்கும், நீதிமன்றத்திற்கும் மனு அளித்திருந்ததாக விளக்கமளித்தார்.
அந்த நாட்களிலும் தாம் சென்னை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளிலேயே இருந்ததாகவும் கூறினார்.
அரசு மக்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சியினர்மீது வழக்குகள் பதிவு செய்வதிலும் கைது நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடு காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேகதாது அணை விவகாரம், காவிரி டெல்டாவில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தன்னை குறிவைத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
இது எனக்கு மட்டும் அல்ல. பல அரசியல் தலைவர்கள்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஒரு வழக்கு, இரண்டு வழக்கு அல்ல, எத்தனை வழக்குகள் போட்டாலும் அவற்றை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளேன். எந்த வழக்கையும் கண்டு அஞ்ச மாட்டேன், என்றார்.
மேலும், சட்டத்துறை அமைச்சர் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் திசைதிருப்பும் வகையில் பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மின் கட்டண உயர்வால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தர தீர்வு காணாமல் புகார்கள் வந்த பிறகே நடவடிக்கை எடுப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட, அரசியல் வழக்குகள் மூலம் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ