இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடக்கம்
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடக்கம்


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.

நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவ கல்வி இயக்ககம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த கலந்தாய்வின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் இதே கலந்தாய்வின் கீழ் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சுற்று கலந்தாய்வு முழுவதும் இணையவழியில் நடைபெற உள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை சரிபார்த்து, தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.

விருப்ப பதிவு, பூட்டுதல் மற்றும் இட ஒதுக்கீடு என பல்வேறு கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறும். இடம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று சேர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது நீட் மதிப்பெண் பட்டியல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கலந்தாய்வு குறித்த சந்தேகங்களுக்கு உதவி மையங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b