Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18 திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத அளவில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும், பெண்கள் விரதம் இருந்து பூக்கள் சூடி கொண்டாடுவதும் வழக்கம். இதனால் பூக்களுக்கான தேவை கடந்த இரண்டு நாட்களாக பன்மடங்கு அதிகரித்துள்ளது.
விலை உயர்வில் மல்லிகை பூ முதலிடத்தில் உள்ளது. சாதாரண நாட்களில் திண்டுக்கல் நாகல் நகர் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை 300 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தரமான மொட்டு மல்லிகை ஆயிரத்து 200 ரூபாய் வரை கூட விற்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் பெண்களால் அதிகம் விரும்பப்படும் முல்லை பூவின் விலையும் எகிறியுள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்ற முல்லை, தற்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கனகாம்பரம் கிலோ 800 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், பட்டு ரோஜா 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து மலர் வியாபாரிகள் கூறுகையில், ஆடி 18 திருவிழாவிற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வதாலும், தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆடி 18 திருநாள் முடிந்த பிறகு படிப்படியாக விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் பூ வாங்க வந்த பெண்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b