Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரியில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்று மற்றும் கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததையடுத்து, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் இரண்டையும் இணைக்கும் கண்ணாடி நடைபாலத்திற்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர்.
வழக்கமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவிடாத படகு சேவை இயக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி நடைபாலத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இன்று கன்னியாகுமரி கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன், கடலில் நீர்மட்டம் தாழ்வாக இருந்ததால் படகுகளை பாதுகாப்பாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவித்தது.
மேலும், படகு துறைக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.
படகு சேவை நிறுத்தப்பட்டதால் கன்னியாகுமரி படகு துறையில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வழக்கமாக கூட்டம் நிரம்பி காணப்படும் படகு துறை, படகு சேவை நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
வானிலை சீரானதும் கடலின் நிலை பாதுகாப்பாக மாறிய பிறகு மட்டுமே படகு சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணிகள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam