பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - சபரிமலை பயணத்தை தவிர்க்க பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வேண்டுகோள்
திருவனந்தபுரம் , 02 ஆகஸ்ட் (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பூஜை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில், கேரளத்தில் தொடர்ந்து ப
A


திருவனந்தபுரம் , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

பூஜை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றைக் கடக்க முடியாத சூழலும் நிலவுகிறது.

இதையடுத்து, இன்றும் நாளையும் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களது சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்வம் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்றும் நாளையும் சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவணி மாத பூஜையையொட்டி வருகிற 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அதேபோல், ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்படும்.

இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA