Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பலர் மாயமாக உள்ளதாகக் கூறப்படுவதால் அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, பத்தினம்திட்டா மாவட்டம் ராணி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து பெய்த மழையால் ஆறுகள், அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் நிரம்பி வழிவதால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை தொடரும் நிலையில், இன்று திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களைத் தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P