Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்று வரும் அரசு சார்பிலான வல்வில் ஓரி விழாவையொட்டி, அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான விழா இன்று தொடங்கி நாளையும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசுத் துறைகளின் விளக்கக் கண்காட்சி, மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
விழாவில் பங்கேற்க நாமக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கொல்லிமலைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், வெளியூர் இளைஞர்கள் சிலர் பழைய டிவிஎஸ்–50 உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து, கொல்லிமலையின் 70 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக இயக்க முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் கடும் இரைச்சல் ஏற்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, விதிமீறி அதிக ஒலி எழுப்பும் வாகனங்களில் வந்த இளைஞர்களை மலைப்பாதையில் செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதை அறிந்த சில இளைஞர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam