வடகோவை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் மீது பெயிண்ட் ஊற்றி அழிப்பு
கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை வடகோவை ரயில் நிலையத்தில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் மீது பெயிண்ட் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் வடகோவை ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட
ரயில் நிலையம்


கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை வடகோவை ரயில் நிலையத்தில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் மீது பெயிண்ட் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் வடகோவை ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரயில் நிலைய முகப்பில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று மாலை இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்தி எழுத்துகள் மீது பெயிண்ட் ஊற்றி அவற்றை மறைத்துள்ளார். பின்னர், ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த ராவணன் என்பவர் சிறிய வாளியில் பெயிண்ட் எடுத்துச் சென்று இந்தி எழுத்துகள் மீது ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam