தண்ணீரின்றி கருகும் குருவை - நன்னிலம் சுற்றுவட்டாரத்தில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்
திருவாரூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த குருவை நெற்பயிர்கள் கண்முன்னே கருகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ள
தண்ணீரின்றி கருகும் குருவை - நன்னிலம் சுற்றுவட்டாரத்தில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்


திருவாரூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச)

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த குருவை நெற்பயிர்கள் கண்முன்னே கருகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு குருவை சாகுபடிக்காக நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர்.

ஆரம்பத்தில் பருவமழை மற்றும் மேட்டூர் நீரை நம்பி சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகளுக்கு, கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியான நன்னிலம் வரை முறையாக வந்து சேரவில்லை என்றும், ஆற்றுப்பாசன கால்வாய்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் நடவு செய்து 40 முதல் 60 நாட்களே ஆன நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து, மஞ்சள் நிறமாக மாறி கருகத் தொடங்கியுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பயிர்களைக் காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

கடன் வாங்கி உரம், விதை, கூலி என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்த நிலையில், தற்போது பயிர்கள் முழுவதும் கருகியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b