மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை - மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை நீடிப்பு
நெல்லை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க
மணிமுத்தாறு


நெல்லை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தற்காலிக தடை இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது.

நீர்வரத்து அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் இறங்கி குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இருப்பினும், பாதுகாப்பான பகுதிகளில் இருந்து அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அருவி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், வனத்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள ஆறுகள், அருவிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P