பூம்புகாரில் காவிரி-கடல் சங்கமம் வறண்டு ஆற்றுக்குள் உட்புகுந்த கடல் நீர் - உப்புத்தன்மையால் மக்கள் கவலை
மயிலாடுதுறை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலுடன் காவிரி ஆறு கலக்கும் புனித சங்கமுக தீர்த்தத்தில் தற்போது காவிரி நீர்வரத்து முற்றிலும் இல்லாததால், கடல் நீர் ஆற்றுக்குள் உட்புகுந்து காவிரி ஆறு உப்புநீராக மாறியுள்ள நிலை
பூம்புகார்


மயிலாடுதுறை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலுடன் காவிரி ஆறு கலக்கும் புனித சங்கமுக தீர்த்தத்தில் தற்போது காவிரி நீர்வரத்து முற்றிலும் இல்லாததால், கடல் நீர் ஆற்றுக்குள் உட்புகுந்து காவிரி ஆறு உப்புநீராக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தோன்றி தமிழகத்தின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கும் காவிரி ஆறு, மேட்டூர் அணை, முக்கொம்பு, கல்லணை வழியாக டெல்டா மாவட்டங்களை கடந்து பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது.

ஆனால் தற்போது காவிரி நீர்வரத்து இல்லாததால், சங்கமுக தீர்த்தம் முழுவதும் கடல் நீர் மட்டுமே காணப்படுகிறது.

இதற்கிடையில், வானகிரி மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் பணிகளும், படகு போக்குவரத்திற்காக காவிரி ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதால், கடல் நீர் மேலும் ஆற்றுக்குள் புகுந்து உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பூம்புகார் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தடுப்பணை வரை கடல் நீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விளைவாக வானகிரி, தருமகுளம், மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் உப்புத்தன்மையாக மாறி வருவதாக பொதுமக்களும், விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சங்கமுக தீர்த்தத்தில் அமாவாசை தர்ப்பணம், புதுமணத் தம்பதிகள் தாலி கோர்த்து வழிபடுதல், ஆடிப்பெருக்கு விழா உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி நீர் இல்லாமல் கடல் நீர் மட்டுமே காணப்படுவது பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர்வரத்து மீண்டும் தொடங்கினால் மட்டுமே சங்கமுக தீர்த்தத்தின் இயல்பான நிலை திரும்பும் என்றும், நிலத்தடி நீரின் உப்புத்தன்மையும் குறையும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam