Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் நாளை (ஆடி 18) நடைபெறவுள்ள சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பழனிக்கு வருகை தந்தனர்.
இதனால் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது
மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான பக்தர்கள் மின் இழுவை ரயில் (வின்ச்) சேவையை பயன்படுத்தினர். இதனால் வின்ச் நிலையத்தில் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், சேவையை பயன்படுத்த பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஏராளமான பக்தர்கள் படிப்பாதை வழியாக நடைபயணமாக மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பொதுத் தரிசன வரிசையிலும் கடும் கூட்டம் நிலவியதால், பக்தர்கள் சுமார் 2- மணி நேரம் வரை காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து, முடி காணிக்கை, காவடி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
கோயில் முழுவதும் “அரோகரா” என்ற பக்தி முழக்கங்கள் ஒலித்ததால் ஆன்மிகச் சூழல் நிலவியது.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மலைக்கோயிலில் நெரிசலைக் குறைக்கும் வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோயிலுக்குச் செல்ல ஒரு வழி பாதையாக கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது
கோயில் பணியாளர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பாக தரிசனம் செய்ய வழிநடத்தினர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிவாரம், மலைக்கோயில், கிரிவீதிகள், வின்ச் நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, போக்குவரத்தையும் சீரமைத்தனர்.
வார விடுமுறையையும், நாளை நடைபெறவுள்ள ஆடி 18 சிறப்பு வழிபாட்டையும் முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை இருப்பதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும்
ஆடி 18-ஐ முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் பக்தர்களுக்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Hindusthan Samachar / ANANDHAN