2 நாள் தடைக்கு பின்னர் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி மற்று
Permission granted to bathe in Courtallam


தென்காசி, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது.

இதன் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் தடைக்குப் பிறகு இன்று (02.08.2026) காலை முதல் மழையின் தீவிரம் குறைந்ததுடன், அருவிகளுக்கு வரும் நீர்வரத்தும் ஓரளவு சீரானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். குளிக்க அனுமதி அறிவிக்கப்பட்டவுடன், நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் ஆர்வத்துடன் அருவிகளுக்குச் சென்று குளித்து மகிழ்ந்தனர்.

இதுபோல ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்தபோதிலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.

குற்றாலப் பகுதியில் தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும், சிற்றருவி மற்றும் புலியருவியிலும் இன்று காலை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றாலத்தில் சாரல் திருவிழாவும் நடைபெற்று வருவதால், விடுமுறை தினத்துடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b