Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் தமிழக வருகை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய எழுச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத் தலைவர்களுடன் வந்திருந்த அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளை இழந்த குடும்பங்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், காங்கிரஸ் இயக்கம் என்றும் உங்களுக்குத் துணையாக இருக்கும் என்ற அவரது உறுதியான வார்த்தைகள் அக்குடும்பங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் ஜோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதிதா அல்வா, மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, எதிர்கால சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்றும் தனது பதிவில் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P