மேற்கு தொடர்ச்சி மலை மழை எதிரொலி: பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
நெல்லை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பாசனத்தி
Papanasam Dam


நெல்லை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இதனால் பாசனத்திற்கான நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாபநாசம் அணையில் ஜூலை 31-ஆம் தேதி 63.40 அடியாக இருந்த நீர்மட்டம், ஆகஸ்ட் 2-ஆம் தேதி 73.30 அடியாக உயர்ந்துள்ளது.

இரண்டு நாட்களில் மொத்தம் 9.90 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று வினாடிக்கு 5,084.796 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 3,036.794 கனஅடியாக இருந்தாலும், அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையிலிருந்து வினாடிக்கு 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுபோல், சேர்வலாறு அணையில் ஜூலை 31-ஆம் தேதி 76.77 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 103.97 அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் 27.20 அடி உயர்ந்து, 100 அடி என்ற முக்கிய அளவையும் கடந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்வதால், இரு அணைகளின் நீர்மட்டமும் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க நீர்மட்ட உயர்வு, தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மழை நீடித்தால், இந்த ஆண்டு பாசனத்திற்கான நீர் இருப்பு மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P