Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், ஜேடர் பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
வாழைத்தார் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய வாழைத்தார்களை வியாபாரிகள் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.350 வரை யிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 வரையிலும், செவ்வாழை காய் ஒன்று ரூ.8 வரையிலும் ஏலம் போனது.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நடை பெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும்.
ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும், செவ்வாழை ஒரு காய் ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது.
வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b