Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதோடு, திமுக ஆதரவுடன் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.
இதனைத் தொடர்ந்து அமைப்பு செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நீக்கம் செய்து விட்டு அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக பசுபதியை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணி, இபிஎஸ் தரப்பில் பசுபதி அணி என இரு அணிகளாக செயல்பட தொடங்கியதோடு இரு அணியினரும் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியது.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாச அவதூறானக் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செஞ்சி, ரோஷனை, காணை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும், அவரது ஆதரவாளர்கள் தரப்பிலும் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது.
இந்த புகார்களின் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு, முன்பு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணனை நேரில் சந்தித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் குறித்து அவதூறாக சித்தரிப்பவர்கள் மீது புகார் கொடுத்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நியமித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இபிஎஸ் ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதியின் சகோதரர் மகன் சந்துரு, கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாக்கியராஜ், நடராஜன், வேல்முருகன், சேகர், செந்தில் உள்ளிட்ட 6 பேர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக ரோஷனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN