செங்குன்றம் அருகே சோதனையில் ரூ.1.08 கோடி பறிமுதல் - ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா கோணத்தில் போலீசார் விசாரணை
திருவள்ளூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் ஹவாலா பரிவர்த்தனை தொ
பணம்


திருவள்ளூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பணம் ஹவாலா பரிவர்த்தனை தொடர்புடையதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் காவல்துறை சோதனைச் சாவடியில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் சோதனை செய்யப்பட்டு வந்தன.

அப்போது, கொரியர் நிறுவனத்தின் பார்சல்களை ஏற்றி வந்த சரக்கு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில், மூன்று பைகளில் வைத்து எடுத்துவரப்பட்ட ரூ.1.08 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த பிரவீன், பவன் மற்றும் லாரி ஓட்டுநர் ராம்பாபு ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த பார்சல் லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்ததாகவும், சென்னையில் நகைகள் வாங்குவதற்காக இந்தப் பணத்தை கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மேல்நடவடிக்கைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam