Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழாவைப் போல் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கடல் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
மேலும், முடி காணிக்கை செலுத்துவதற்கும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடுவதற்கும் சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.
அதேபோல், ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகருக்குள் வந்ததால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பக்தர்களின் தரிசனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P