நாமக்கல் அருகே சார்ஜில் இருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்து தீப்பற்றியதில் 3 வாகனங்கள் எரிந்து நாசம்
நாமக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை சார்ஜில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் சார்ஜ்
நாமக்கல் அருகே சார்ஜில் இருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்து தீப்பற்றியதில் 3 வாகனங்கள் எரிந்து நாசம்


நாமக்கல், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை சார்ஜில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் பேட்டரியில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி பைக் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இந்த தீ விபத்தில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு வாகனத்திற்கும் தீ பரவியது.

தீயின் தீவிரத்தால் மூன்று வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்குள் மூன்று வாகனங்களும் எரிந்து நாசமாகியிருந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரி வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரமற்ற பேட்டரி மற்றும் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b