Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தப் படியாக திருச்சி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் நாள்தோறும் அதிகளவில் பயணிகளை கையாண்டு வருகிறது.
குறிப்பாக திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, குவைத், பஹ்ரைன், கத்தார், இலங்கை, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கம், கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அவ்வப்போது, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அதில், சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரின் உடைமையில் இருந்து 3.5 கிலோ எடைக் கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த பயணியையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 3.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், கஞ்சா மற்றும் அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவது திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாக
உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN