வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச..) கோவை மாவட்டம் வால்பாறையை ஒட்டிய தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அல
நீர்வீழ்ச்சி


கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச..)

கோவை மாவட்டம் வால்பாறையை ஒட்டிய தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிரப்பள்ளி பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

வெள்ளப்பெருக்கை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால், நீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்களை நிறுத்த முடியாத அளவுக்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சாலைகளில் பாறைகள் மற்றும் கற்கள் சரிந்து விழும் அபாயமும் அதிகரித்துள்ளது.

நேற்று பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலைகளில் எப்போது வேண்டுமானாலும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படலாம் என்பதால், அத்தியாவசிய தேவையின்றி கேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கேரள மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

மேலும், பாதுகாப்பு காரணங்களால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam